திராவிடர் இயக்கம் பார்வையில் பாரதியார் - Meeran.Online

Search This Blog

Tuesday, 11 December 2018

திராவிடர் இயக்கம் பார்வையில் பாரதியார்


நூல் குறிப்பு:
பாரதி என்றவுடன் நமது மனதில் தோன்றும் பிம்பம் முறுக்கிய மீசை, கூர்விழிப் பார்வை, தேஜசான முகம், தைரியமான குணம் மற்றும் தன் சொந்த சாதியையே சாடும் முற்போக்குக் கவிதைகள் ஆகியவை. இதற்குக் காரணம் நமது ஊடகங்களில் நீண்ட காலமாக வெளியான பாரதியின் ஓவியங்கள், அவரின் கவிதைகள் மற்றும் திரைப்படங்களில் பாரதியாக நடித்த எஸ்.வி. சுப்பையாவின் நடிப்பு போன்றவைதான். இந்தப் பிம்பங்களை ஒவ்வொன்றாக வலுவான ஆதாரங்களுடன் தகர்த்தெறிகிறது இந்நூல்.

முதல் அத்தியாயமான 'பாரதியின் உயிர்மூச்சு தமிழா? ஆரியமா?' என்ற கட்டுரையிலேயே பாரதி க்ளீன் போல்டாகிறார். அவரின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் போன்றவை ஆரிய மொழி, ஆரிய நாகரிகம், ஆரியப் பண்பாடு போன்றவற்றை உயர்த்திப் பேசுவதாகவே உள்ளன என்ற உண்மையை ஏராளமான தரவுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர்.

1908ல் பாரதி ஆசிரியராகப் பணிபுரிந்த இந்தியா ஏட்டில் வெளியிடப்பட்ட படைப்புகளுக்கு எதிராக சென்னை நகரப் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த கைது வாரண்ட்டிற்குப் பயந்து போய் தன் மனைவிடம் கூடக் கூறாமல், அன்று இரவே பாண்டிச்சேரிக்குச் சென்று விட்டார் 'அச்சமில்லை... அச்சமில்லை' எனப் பாடிய பாரதியார். இச்சம்பவத்தை 'இந்தியா' இதழின் உரிமையாளர் மண்டயம் சீனிவாசன் பதிவு செய்துள்ளார்.

அடுத்து பாரதி காந்தியைச் சந்தித்தார் என்று ஒரு சம்பவம் ஞானராஜசேகரனின் 'பாரதி' திரைப்படத்தில் கூட காட்டப்பட்டது. இதில் துளி கூட உண்மையில்லை... பாரதி காந்தியைச் சந்திக்கவேயில்லை எனத் தேதிவாரியாக தகுந்த ஆதாரங்களுடன் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பாரதியின் பார்ப்பன இன உணர்வு அவரின் முக்கால்வாசி கவிதைகளிலும் கட்டுரைகளிலும் எப்படி விரவியுள்ளது என்பதைப் படிக்கும் போது நமக்கு அதிர்ச்சியாக உள்ளது. "மாட்சிமை தாங்கிய" ஆங்கிலேய கவர்னர் பெருமானின் காலடிக்கு சமர்ப்பித்த கருணை மனுக்களில் ஒன்றில் கூட "தான் பிறந்த பார்ப்பனக் குல மேன்மைக்கு" சிறை வாழ்வு ஒத்து வராது எனச் சுய சாதிப் பெருமை!

ஒருமுறை அல்ல! 1912, 1913, 1914 தொடர்ந்து  இரக்கம் காட்ட வேண்டி வடநாட்டு சாவர்க்கர் வழியில் தொடர்ந்து மன்னிப்புக் கடிதங்களை எழுதிக் கொண்டே இருக்கிறார்.

இதுபோக பாரதி பெண் விடுதலை, பொதுவுடமை, திராவிட இயக்கம் மற்றும் மதங்கள் போன்றவை பற்றிய அவருடைய முரணான கருத்துக்கள் இந்நூலில் தனித்தனி அத்தியாயங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்நூலுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் பொற்கோ அருமையானதொரு சிறப்புரை எழுதியுள்ளார். இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்துதான் இதை தாம் எழுதியதாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பாரதி உயிரோடிருக்கும் பொழுது கண்டு கொள்ளாத பார்ப்பனர்கள் அவர் இறந்த பிறகு அவரை 'மகாகவி' என இன்றும் போற்றிக் கொண்டு பரப்புரை செய்வது முரணாக இருக்கிறது. பாரதியின் பிம்பத்தைத் தூள் தூளாக்கிய இந்நூலுக்கு இதுவரை எந்த மறுப்பு நூலையும் பாரதி பக்தர்களால் எழுத முடியவில்லை என்பதுதான் இந்நூலின் வெற்றி.
டவுன்லோட் லிங்க் கிலே உள்ளது தேவைப்படும் சகோதரர்கள் டவுன்லோட் செய்து கொள்ளவும்


Download 

No comments:

Post a Comment

Comments